திருவாலங்காடு

கடவுளை தொழுவதற்காக அனைவரும் கோவிலுக்கு போக நான் மட்டும் அன்று விசித்திரமாக அந்த கோவிலின் ஆச்சரியங்களை ரசிக்க சென்றேன். ஒரு வரலாற்று ஆர்வலராக, முதன்மையாக சோழர்களின் படைப்புகளில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் நான் அவர்களின் படைப்புக்களை தேட ஆரம்பித்தேன். இருந்தும் என் பட்டியலில் இப்பொழுது நான் எடுத்துரைக்கப்போகும் ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் கோவில் அந்த சமயத்தில் இல்லை.

ஆனால், சென்னை மேற்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க கோவில்களில் ஒன்றான, 12 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் உருவாக்கப்பட்ட இந்த அழகிய சிங்காரமான கோவிலை பற்றி எப்படி நான் அறிந்து கொண்டேன்?

மீண்டும் பொன்னியின் செல்வன் புத்தகமே அதற்க்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த புத்தகத்தில், பெரும் வீரரான ஆதித்ய கரிகாலனை பற்றிய செப்பு தகடுகள் இன்றளவும் அக்கோவிலில் காணப்படுகின்றன என்று கல்கி அவர்கள் குறிப்பிட்டிருப்பார். இக்குறிப்பே இக்கோவிலுக்கு செல்லும் என் ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

நான்கு தேவார பாடல்களை பாட பெற்ற ஸ்தலமாக, 200 வருடம் பழமைவாய்ந்த ஆலமரத்தை ஸ்தல விருக்ஷமாக கொண்டுள்ள இந்த மாபெரும் கோவிலை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.

இனிமையான தருணம்

குடியரசு தினத்தன்று அதிகாலையில் எழுந்து, “பேப் (babe)” என நான் செல்லமாக அழைக்கும் என் இருசக்கர வாகனத்தில் சென்று ஒரு மாபெரும் சோழர்களின் படைப்பை பார்க்கப்போகிறோம் என்று என் ஆர்வம் அதிகரிக்க, நாம் ஏன் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் சென்று அங்கு சோழர்களின் கலை ஆர்வத்தில் முன்னோடியாக விளங்கிய பல்லவர்களின் கைத்திறன்களை பார்க்க கூடாது என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. இருந்தும் என் திட்டத்தில் இருந்து விலகிவிடாமல், வடாரண்யேஸ்வரரையே பார்க்க சென்றேன். நான் இதுவரை பயணிக்காத நிறைய வளைவுகளுடன் அமைந்த இந்த புதிய பாதை நான் பயணிக்க சிரமமாயிருந்தாலும், என் ஆர்வமே என்னை அழைத்துச்சென்றது. 1.30 மணிநேரத்திற்கு பின்னர் கோவிலை அடைந்தேன்.

Thiruvalangadu_Temple

இந்த மாபெரும் கோவிலையும் அதன் பெரும் மதில் சுவர்களையும் கண்டு சிறிது நேரம் வியப்படைந்த நான், அந்த கோவிலை என் இருசக்கர வாகனத்திலேயே இரு முறை வலம் வந்தேன். அப்பொழுது தான் அக்கோவிலின் அமைப்பையும், அதன் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கும் பெரும் குளத்தையும், வரலாற்றுச் சிறப்பு மிக்க காளி கோவிலையும் காண முடிந்தது.

கலைஞர்களின் நிபுணத்துவம்

இந்த கோவிலை சுற்றி பெரிய சுவர்களும் அதன் பின்புறம் மாபெரும் குளம் இருந்தபோதும், கட்டடக்கலை பாணியே நம் கவனத்தை ஈர்க்கின்றன. இந்த கோவிலுக்குள் பல சிறிய கோவில்கள் உள்ளன. அந்த ஒவ்வொரு சிறிய கோவிலிலும் உள்ள சுவர்களில் மிகவும் நுட்பமான முறையில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

அதில் என் உணர்வை ஈர்த்த சில விஷயங்கள்,

  1. கோவிலுக்குள் இருக்கும் சுவர்களின் மூலைகளில் சிங்கம் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் காட்சி.
  2. சிவன் சன்னதிக்கு பக்கத்து சுவரில், அபிஷேக தீர்த்தத்தை வெளியில் கொண்டு வரும் சிலைகள், சிம்ம யாளிகளை போல் மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ள சிலைகள்.
  3. சிவன் ஆலயத்தைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான தூண்களில், மிகவும் நுட்பமாக, சிறப்பாக செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள்.
  4. வெளிப்புற தூண்களில் உச்சியில் சீற்றத்துடன் அமர்ந்திருக்கும் சிம்ம யாளிகள்.

நம் கவனத்தை வெகுவாக கவர்கின்றன. உங்கள் ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் சில படங்களை இங்கு உங்களுக்காக இணைத்துள்ளேன்.

Sculptures_Thiruvalangadu
Sculptures1_Thiruvalangadu

தனிச்சிறப்பான நடராஜர் சிலை

இங்கே காணப்படும் நடராஜ சிலை, இயல்பை விட அசாதாரணமானது. அந்த சிலைக்கு பின்னால் ஒரு சுவாரசியமான வரலாறும் உண்டு.

அரக்கர்களை கொன்று, மிகவும் கடுமையான நிலையில் இருந்த காளியை அமைதிப்படுத்துவதற்காக சிவபெருமான் அங்கு வந்தார். சிவபெருமானை தன்னோடு நடனமாட சாவல் விடுத்த காளி, அவர் வெற்றிபெற்றால் அந்த இடத்தை விட்டு சென்று விடுவதாக கூறினார். அவ்வாறு இருவரும் நடனமாடும் போது சிவபெருமானின் காதணி கீழேவிழ அதை அவரது இடது காலினால் எடுத்து செங்குத்தாக உயர்த்தி தன் காதில் மீண்டும் மாட்டிக்கொண்டார். அந்த காட்சியை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கியிருந்த காளி, சிவபெருமானை போல் அற்புதமாக நடனமாடமுடியாது என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டு சிவன் வெற்றிபெற்றதாக அறிவித்தார்.

மேற்கூறிய வரலாறு, இங்கிருக்கும் விசேஷமான நடராஜ சிலைக்கான காரணத்தை நமக்கு தெளிவுபடுத்துகிறது. அந்த சிலையின் படம் உங்களுக்காக,

Nataraja_Statue

200 வருடம் பழமை வாய்ந்த ஆலமரம்

வெளிப்பிரகாரத்தில் 200 ஆண்டு பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இது இந்த கோவிலின் ஸ்தல விருக்ஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த இடம் ஒரு காலத்தில் ஆலமரங்களின் அடர்ந்த வனப்பகுதியாகும். இதுவே இவ்விடத்திற்கு திருவாலங்காடு என்று பெயர் வர காரணமாயிருந்தது.

திரு + ஆலம் + காடு = திருவாலங்காடு.

இந்த மாபெரும் மரத்தை பார்க்க நான் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் கடந்த மாதம் தான் இந்த மரம் தீப்பற்றி எரிந்து வறண்டது. பக்தர்கள் மரத்தின் அடியில் கற்பூரம் பற்றவைத்ததே இதற்கு காரணம் என்றும், முன்னமே அந்த மரம் வறண்டு இருந்ததால் மிக எளிதாக தீ பற்றிக்கொண்டது எனவும் கூறுகின்றனர்.

தீப்பற்றுவதற்கு முன்னாள் நான் எடுத்த கடைசிக் காட்சி.

Tree
200 ஆண்டு பழமைவாய்ந்த ஆலமரம்

மாபெரும் குளம்

இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் இதன் பின்புறம் அமைக்கப்பட்டிருக்கும் மாபெரும் குளமாகும். என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய குளத்தை நான் எந்த ஒரு கோவிலிலும் பார்த்தது இல்லை. இப்பெரும் குளம், என் பசிக்கு இன்னும் தீனிபோடுவதாக அமைந்தது.

குளம் அசுத்தமாக இருப்பதால், தண்ணீர் வளங்களை பாதுகாக்கவும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் தமிழகத்தின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறையின் கவனம் இங்கு தேவைப்படுகிறது.

குளத்தின் காட்சி.

Pond_Thiruvalangadu

அரை மனதுடன் நகர்ந்தேன்

திருவாலங்காட்டுக் கோவிலின் சுவர்களில் பல
நூற்றாண்டுகளாக பல்வேறு நன்கொடைகளை பதிவுசெய்து பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை கண்டறிவதற்கு பதிலாக, இந்த
ஆலயத்தின் சுற்றிலும் சமைக்கப்பட்டுள்ள பல அழகிய பொருட்களை கண்டறிந்தேன்.

இங்கு வாழும் மக்களுக்கும் இந்த கல்வெட்டுகளைப் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தது, மேலும் வருத்தத்தை தந்தது. கல்வெட்டுகளை கண்டறிய முடியாமல் போகிறோமே என்று என் உணர்வுகள் என்னை இங்கிருந்து நகரவிடாமல் செய்தன.

1018 A.D ஆண்டில் பொறிக்கப்பட்ட மிகவும் முக்கியமான சோழர்களின் 31 செப்புத்தகடுகள், 1905 ஆண்டில் இக்கோவிலில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

திருவாலங்காட்டுக் கோவிலில் உள்ள கல்வெட்டுகளைப் பற்றிய சரியான தகவல்களை சேகரித்தப் பிறகு, சரியான வழிநடத்துதலுடன் இந்த பிரம்மாண்டமான கோவிலுக்கு நிச்சயமாக நான்
மீண்டும் வருவேன். தமிழ்நாட்டில் இன்னுமொரு பொன்னான இடத்தைப் பார்வையிட்ட மகிழ்ச்சியுடன்,

திருவாலங்காட்டில் இருந்து நகர்ந்தேன்.

தமிழகத்திலும்,
அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள இதுபோன்ற சுவாரஸ்யமான கோவில்களை நீங்கள் கண்டறிந்தால், கீழ் உள்ள கருத்துப் பிரிவில் அதை பகிரலாம். அதன் சிறப்பம்சங்களை நாம் ஆராய்ந்து, அடுத்த தலைமுறைக்கு நம் முன்னோர்களின் பெருமைகளை எடுத்துரைப்போம்.

நன்றி.


கோவில் இருக்கும் இடம்

இதனுடைய ஆங்கில பதிவு – Why should you visit Thiruvalangadu Temple?

திருத்தியவர் – Mohan Vel

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s